Friday, 16 October 2015

மிரண்டு போன பிரான்ஸ்

    ‘செவாலியே’ என்றால் பிரெஞ்சு மொழியில் ‘மாவீரன்” என்று பொருள். பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதாகும். பொதுவாக இந்த விருதை ‘ஹாலிவுட்” நடிகர்களே பெற்று வந்த நிலையில், 1994-ம் ஆண்டு இந்த ‘செவாலியே” விருதுக்கு நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பிரான்ஸ் அரசு தேர்வு செய்து கௌரவித்தது. தமிழில் அழகி உள்பட பல்வேறு படங்களில் நடித்த நடிகை நந்திதா தாஸ் அவர்களை சமீபத்தில் தேர்வு செய்து கௌரவித்துள்ளது. நாம் வளர்ந்து வரும் நாட்டைச் சேர்ந்தவர்கள் என நம் திறமையை அலட்சியம் செய்யவில்லை.

    சத்துணவுதந்த மனிதநேயராம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் தபால் தலையை 2009, 2010, 2011 ஆகிய ஆண்டுகளில், வெளியிட்டு பிரான்ஸ் அரசு சிறப்பித்துள்ளது. பிரான்ஸ் பொதுமக்கள் ஜரோப்பா உள்ளிட்ட உலகின் எந்த பகுதிக்கும் அனுப்பக் கூடிய கடிதங்களில் எம்.ஜி.ஆர். தபால்தலையை ஒட்டி பிரான்ஸ் நாட்டு முத்திரையை பதிக்கும் வகையில் இந்த தபால்தலைகளை வெளியிட்டுள்ளனர்.   

சமீபத்தில், ஓமன் கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் கப்பலை கடற்கொள்ளையர் சிறை பிடித்தனர். அதில் இருந்த நமது 11 இந்திய மாலுமிகளை பிரான்ஸ் கடற்படை போராடி 18.01.2014 அன்று உயிருடன் காப்பாற்றியது.

    பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மலை ஏறும் நிபுனர் ஆல்ப்ஸ் மலையின் மான்ட் பிளாங்க் சிகரத்தில் ஏறினார். மூடிக்கிடந்த பனிக்குள் தட்டுதடுமாறி நடந்த போது உலோகத்தினால் ஆன ஒரு பெட்டி அவரது காலில் தென்பட்டது. அதை திறந்து பார்த்த போது உள்ளே கண்களை பறிக்கும் விலை மதிப்பற்ற மரகதம், பச்சை, சிவப்புக்கல் மற்றும் நீலக்கற்களால் ஆன நகைகளும், 100 ரத்தின கற்களும் இருந்தன. இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என நகைகளில் முத்திரை பொறிக்கப்பட்டு இருந்தது. எனவே இவை இந்தியருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. நகை பெட்டியை எடுத்த மலை ஏறும் நிபுனர் அதை பிரான்ஸ் போலீசிடம் ஒப்படைத்துள்ளார். அதன் மதிப்பு சுமார் 200 கோடி. 1966-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி மும்பையில் இருந்து இலண்டன் சென்ற இந்திய விமானம் விபத்துக்குள்ளாகி பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் பனிமலையின் மான்ட்பிளாங்க் சிகரத்தில் விழுந்தது. இதில் 117 பேர் பலியாயினர். எனவே, இந்த விபத்தில் இறந்தவர்களில் ஒருவருக்கு இந்த ரத்தினகற்கள் சொந்தமாக இருக்கலாம். பிரான்ஸ் அரசு இந்த விபரத்தை இந்தியாவிடம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து பனிமலையில் புதைந்து கிடந்த ரத்தினகற்கள் யாருக்கு சொந்தம் என விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. அடித்து பிடுங்கும் ஊழல் பெருகிவிட்ட இந்த காலத்தில் 1966ல் இறந்து போன இந்தியர்களின் உடமையை ஒப்படைக்க முயற்சி எடுக்கும் பிரான்ஸை, இந்திய மாலுமிகளின் உயிரை காப்பாற்றிய, நமது திறமையை, மனிதநேயத்தை, கௌரவிக்கும் நாட்டைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

ஐரோப்பிய நாடுகளில் 3-வது பெரிய நாடு. தனி நபர் சராசரி வருவாய் கூ 35இ156. தலைநகர்-பாரீஸ், நாணயம் - யூரோ. 1789 -இல் நடைபெற்ற பிரெஞ்;சு புரட்சியையடுத்து புதிய பாராளுமன்றமான “நேஷனல் அசெம்ப்ளி” உருவாக்கப்பட்டது. 1848-ல் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.

    பிரான்ஸ் நாட்டின் வடிவத்தைக் கொண்டு இதை (The Hexagon) அறுகோணி என்று அழைப்பது உண்டு. உலகின் 4-வது பணக்கார நாடு.  உலகப் பொருளாதார சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்று. பிரான்சுதான் உலகிலேயே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு, இங்கு ஆண்டுதோறும் 79.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். உலகின் 5-வது பெரும் ஏற்றுமதியாளர்களை கொண்ட நாடு. ஜி-8 மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினர். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினரான பிரான்ஸ் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடாகும். உலகில் அங்கீகரிக்கப்பட்ட 8 அணுசக்தி நாடுகளில் ஒன்று.

பண்டைய ஜெர்மானிய மொழியில் ‘பிராங்க்” என்பது அடிமைகள் அல்லாத விடுதலை கொண்ட மக்களை குறித்தது என்றும், இதுவே அப்பெயர் ஏற்பட காரணமாகியது எனவும் சொல்லப்படுகிறது.

    முதன் முதலாக சுற்றுச்சூழழுக்காக அமைச்சகம் ஒன்றை உருவாக்கிய நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் விளங்குகிறது. 2010-ல் சுற்றுப்புறச் சூழல் உணர்வு கொண்ட நாடுகள் வரிசையில் பிரான்சுக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது. பிரான்சு நாட்டில் மாண்ட்பெல்லியர் என்ற பகுதியை கேளிக்கைக்காகவே ஒதுக்கியிருக்கிறார்கள். அங்கு லீ சிவா (Le Shiva) என்ற வடஇந்திய ரெஸ்டாரண்ட் கூட உண்டு. வாடிக்கையாளர்களை ‘அரே பய்யா” என்று அன்புடன் வரவேற்பார்கள்.

    நாம் போகிப் பண்டிகையின்போது, பழைய பொருட்களை தீயிட்டு அழிப்பதுபோல் டிசம்பர்-31, 2013 அன்றிரவு புத்தாண்டு தினத்தில் மட்டும் பிரான்சில் 1067 பழைய கார்கள் எரிக்கப்பட்டது. அந்நாட்டில் பழைய கார்களை எரித்து அழிக்கும் சம்பவம் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.
    பிரான்ஸில் பொது இடத்தில் துப்பாக்கி காட்டி மிரட்டுவது கடும்குற்றம். நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுவரை சிறை தண்டனை கிடைக்கும். பிரான்ஸ் சட்டப்படி, விலை மாதுக்களுக்கு அங்கு தண்டனை கிடையாது. மாறாக, விலை மாதுக்களின்; வாடிக்கையாளர்களுக்கு 1500 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படுகிறது.  பிரான்ஸ் நாட்டில் பாரிஸ்-வெர்சாய் நகர போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்ற ரயிலின் கலைநயம்மிக்க உள்தோற்றம் மிகவும் அழகானது. அதிசயமானது. அதைப்பார்த்து ரசிக்க, பயணிக்கவே கொடுப்பினை வேண்டும்.

    பிரான்ஸ் நாட்டில் வாழும் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் தாராளமான முறையில் கிடைக்கின்றன. வெளிநாட்டவரும் பயன் அடைகின்றனர். மாத சம்பளத்துடன் மிகவும் மலிவான விலையில் பலவித தரமான உணவுகள் வழங்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் இலவச பயணச்சீட்டை ஒவ்வொரு நிறுவனமும் தன் பணியாளர்களுக்கு அளிக்கின்றன. தனியார் துறைகளில் ஓய்வுகால நிதி மற்றும் ஆயுள் காப்பீடு கொடுக்கப்படுகிறது. இப்படிப்பட்ட பிரான்ஸ் அரசு சமீபத்தில் ஒரு எச்சரிக்கை விடுத்தது.
 டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி சமீபத்தில் டெல்லியில் பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் உள்ள பிரான்ஸ் பெண் சுற்றுலாப்பயணிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி அந்நாடு சமீபத்தில் அறிவுறுத்தியுள்ளது.

    பொதுவாக, பெங்களுர், இராஜஸ்தான் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்லும் பல இங்கிலாந்து பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்ற புகார் உள்ளது. பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தர முன்வருவதில்லை. இந்தியாவிற்கு சுற்றுலா வந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 51 வயது ஸ்திரீ டெல்லியில் ஒரு கும்பலால் கத்தி முனையில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்ட கோர சம்பவம் பெரும் அதிர்ச்சியை பிரான்ஸில்  ஏற்படுத்தியுள்ளது. 

    உண்மையில், நியாயப்படி,  நம் நாட்டிற்கு  சுற்றுலா வரும் பயணிகளின் உயிருக்கும், உடமைக்கும், நாம்தான் முழுப்பொறுப்பு.

    இந்தச் வன்முறை சம்பவம் உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும். மிகவும் கண்டனத்திற்குரியது. உலகளவில், இந்தியாவிற்கு இருக்கும் நற்பெயரை  களங்கப்படுத்தும் வகையில் உள்ளது. தொடர்புடைய காமூகர்கள் தண்டிக்கப்படவேண்டும். ஹீரோவாக இல்லாவிட்டாலும் வில்லன்களாக செயல்படக் கூடாது அல்லவா? இந்தியா வரும் சுற்றுலாப்பயணிகளிடம் வன்மத்துடன் நடந்து கொள்பவர்கள், ஏமாற்றி காசு பறிப்பவர்கள் எப்படி பிடிபடாமல் திரிகிறார்கள்? இதே நிலை நீடித்தால் உலக நாடுகளால்; வெறுக்கப்படுபவர்களாக நாம் மாறிவிடுவோம். சுற்றுலாப்பயணிகள் நமது விருந்தினர்கள்.  விரோதிகள் அல்ல. இனிவரும் காலங்களில் அவமானகரமான விஷயங்கள் தொடர்கதையாகிவிடக் கூடாது. சுற்றலா செல்ல நம் நாட்டை தேர்தெடுப்பது நம் சுற்றுலா துறை வளருவதற்கு கிடைத்த அபூர்வ வாய்ப்பு. அநாகரிக நடத்தைகளால் அதைக் கெடுத்துக் கொண்டால், நம் கழுத்தை நாமே அறுத்துக் கொள்வதற்கு சமம். வெளிநாட்டினர் நம் நாட்டிற்கு சுற்றுலா வருவதை தவிர்க்க ஆரம்பித்தால் போட்டி நாடுகளுக்கு அதுவே லக்கி பிரைஸ்.

                                                               நாமக்கல்  தி. சுவாமிநாதன்

No comments:

Post a Comment