Friday, 9 October 2015

வால்மார்ட் - வரமா? சாபமா?

1962-ல் அமெரிக்காவில் உள்ள அர்கன்ஸாஸ் நகரத்தில் வால்மார்ட் சிறிய கடையாகத் தொடங்கப்பட்டது. கடந்த 50 வருடங்களில், 29 நாடுகளில் 10390 கடைகள், 22 இலட்சம் ஊழியர்கள், 440 பில்லியன் டாலர்கள் வருட விற்பனை என மாபெரும் நிறுவனமாக விரிவாக வளர்ந்துவிட்டது. அகில உலகக் கம்பெனிகள் வரிசையில் 3வது இடமும் சில்லறை விற்பனையில் உலகிலேயே முதலிடமும் வகிக்கிறது. எப்போதும் மிகக் குறைந்த விலை என்பதே இந்நிறுவனத்தின் அடிப்படைக் கொள்கை. இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை.



    ‘வால்மார்ட் இந்தியா லிமிடெட்” என்ற பெயரில் புதிய நிறுவனத்தைத் இந்தியாவில் தொடங்கி அதை இந்திய நிறுவனச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யத் திட்டமிட்டு உள்ளது. வால்மார்ட் நிறுவனத்தின் தற்போதய ஆசியப்பிரிவுத் தலைவர் ஸ்காட் ப்ரைஸ் ஆவார்.

    உலகிலேயே எங்கு, எந்த பொருள் மலிவாக கிடைக்கிறதோ அங்கிருந்து வாங்குவதுதான் வால்மார்ட்டின் வழக்கம். சீனாவிலிருந்துதான் மிக அதிகமாக  கொள்முதல் செய்கிறது. வால்மார்ட் கடையில் தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டால் பெரும் கூட்டம் கூடிவிடும். தரமான பொருள் விலை குறைவாக கிடைப்பதால் உலகளவில் மத்திய தர வர்க்கம் பெரிதும் ஈர்க்கப்படுகிறது.

    1962-ல் வால்மார்ட் நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையம் சாம் வால்ட்டனால் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் பெண்டோவில், அர்கன்ஸாஸ், யூ.எஸ்.ஏ.-வில் உள்ளது. இதன் தற்போதைய தலைவர் - எஸ். ராபர்ட் வால்ட்டன்.

    வால்மார்ட்- அமெரிக்காவின் முக்கிய அடையாளம். அமெரிக்கா- வால்மார்ட்டை முற்றிலும் நேசிக்கிறது. வால்மார்ட்டை தடை செய்வேன் என பிரச்சாரம் செய்த ரோம்னி அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற வில்லை. வால்மார்ட் என்பது குண்டூசி முதல் ஆகாய விமானம் வரை விற்கும் ஒரு பலசரக்கு கடை. சந்தைப்படுத்துதலில் உற்பத்தியை சிறப்பாக கையாண்டு, சேதாரம் குறைவாகவும், வீண் விரயம் தவிர்க்கப்பட்டு சீராகவும், விலை குறைவாகவும் நுகர்வோருக்கு கொண்டு சேர்க்கிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு வாரமும் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் வால்மார்ட் கடைகளுக்குச் சென்று தங்களுக்கு, தேவையான பொருட்களை வாங்குகின்றனர்.

    170 வெவ்வேறு நாடுகளின் ஒட்டுமொத்த வருமானத்தைக் காட்டிலும் வால்மார்ட்டின் வருமானம் சற்று அதிகம். அமெரிக்காவில் மிக அதிக அளவில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்வது வால்மார்ட் மட்டுமே.
(SAVE MONEY LIVE BETTER) வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் குறைந்த விலை-பணத்தை சேமியுங்கள்-நன்றாக வாழுங்கள்- என்பதே இதன் தாரக மந்திரம். தன்னுடைய பணியாளர்களை ஊழியர்களாகக் கருதாமல், ‘அசோசியேட்ஸ்” என்றுதான் அழைக்கிறது வால்மார்ட்.

    2005-ல் காத்ரினா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 மில்லியன் டாலர்களை நிவாரண நிதியாக அள்ளித் தந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பையும் வழங்கியது.    1. குறைவான விலைக்கு நல்ல தரமான பொருளை எதிர்பார்ப்பவர்கள். 2. விலையைப் பற்றி கவலையின்றி பொருட்களை வாங்குபவர்கள்,

3. விலைக்கு ஏற்ற தரமான பொருளை நாடுபவர்கள் என நுகர்வோர்களை மூன்றாக பிரித்து அவர்களுக்கு ஏற்ற வகையில் விற்பனையில் மாற்றங்களை கொண்டு வந்ததே வால்மார்ட்டின் அபார வெற்றிக்கு காரணம். வால்மார்ட்டில் வாடிக்கையாளர்களுக்கு வேண்டியவை உலகின் எந்த மூலையில் இருந்தும் கொண்டு வந்து கொடுக்கப்படும். இங்கு வால்மார்ட்டின் வாடிக்கையாளர் விரும்பும் எந்தப் பொருளும் இல்லை என கைவிரித்ததே இல்லை. சமீபத்தில் சவப்பெட்டிகளையும் கூட விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது. சிறு வயதில் வீடு வீடாக நாளிதழ்களை விநியோகித்தவர் சாம் வால்ட்டன். படிப்பு முடிந்ததும் தனியார் விற்பனை அங்காடியில் 75 டாலர் மாத சம்பளத்திற்கு வேலை செய்துள்ளார்.

    மலிவான விலையில் ஏகப்பட்ட ரகங்கள் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் உள்ளே சென்று தாங்கள் விரும்பிய பொருட்களை  தாங்களே தேர்வு செய்து ஒருக் கூடையில் போட்டுக் கொண்டு வந்து பின் பணம் செலுத்தும்முறையை முதன்முதலாக உலகுக்கு அறிமுகப்படுத்தியதே சாம்வால்ட்டன் தான். இத்தகைய நிலையில் இன்று நம் நாட்டில் விரிவாகப் விவாதிக்கப்பட்டு வரும் ஒன்றுதான் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது.

ஆதரவாளர்களின் வாதம்;:

    இணையதளத்தில் ஈ-காமர்ஸ் வியாபாரம் தொடங்கியபிறகு, பூகோள தடைகள் தகர்ந்து கொண்டிருக்கிறது. இந்திய சில்லறை வணிகத்தில் விவசாயிகளுக்கு விற்பனை விலையில் 10-15மூ-தான் கிடைக்கிறது. 85-90மூ பங்கை சில இடைத்தரகர்களான வியாபாரிகள் எடுத்துக் கொள்கிறார்கள் என குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. 2001-ல் இந்திய மென்பொருள் துறையில் பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 20 இலட்சமாகும். ஏற்றுமதி சுமார் 69 பில்லியன் டாலர்களாகும். அமெரிக்கா அவுட்ஸோர்ஸிங் முறையில் பணிகளை நமக்கு தருவதால் இது சாத்தியமாகிறது. இது போல நாமும் இன்றைய காலகட்டத்தில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டிற்;கு அனுமதி தரவேண்டியுள்ளது. 

    வால்மார்ட் -இந்தியாவுக்கு வந்தால் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும். இந்தியப் பொருளாதாரத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை வெளிநாட்டு முதலீடுகளால்தான் தீர்மானிக்கமுடியும். விவசாயிகளுக்கு லாபமான விலையும், விலைப் பொருட்களை வெளிச்சந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் வசதிகளும், பாதுகாத்து வைக்கும் வசதிகளும் அந்நிய முதலீட்டால் அதிகரிக்கும். வேலை வாய்ப்பு பெருகும். விலை குறைவாக எல்லாப் பொருட்களும் வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் கிடைக்கும். ஜி-20 நாடுகளின் ஒப்பந்தப்படி, உலகளவில் 1991 முதல் இந்திய அரசு போட்டு வந்திருக்கும் ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் வெளிநாட்டு கம்பெனிகளை அனுமதிக்க முடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது. அறுவடைக்குப்பின் வீணாய் போகும் தானியங்களின்; அளவு வெகுவாகக் குறையும். 2012-ல் இந்திய சில்லறை வர்த்தகத்தின் தோராய மதிப்பு 496 பில்லியன் டாலர்கள் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) ஆகும்.

    இந்த அளவு பணம் புழங்கும் இந்தியச்சில்லறை வர்த்தகம் பெரும்பாலும் முறைசாரா வணிகமாகவே இருக்கிறது. இது நம் நாட்டின் பெரிய பலவீனம். முறைப்படுத்தப்பட்ட இந்திய சில்லறை வர்த்தகம் சுமார் 3 சதவீதம் மட்டுமே. முறைசார் வணிகம் என்பது சங்கிலித் தொடர் அல்லது தனிப்பல்பொருள் அங்காடி ஆகும். இவர்களுக்கு வணிக எண், விற்பனைவரி, வருமானவரி, தணிக்கை எல்லாம் உண்டு. முறைசாரா வணிகம் என்பது தெருவுக்குத் தெரு இருக்கின்ற பொதுவணிக கடைகளாகும். முறைசார் வணிகத்தில் பணி, வேலை, நேரம், சம்பளம் எல்லாம் ஒரே வரையறைக்குள் கொண்டுவரப்படும். இங்கு தொழிலாளர் சட்ட திட்டங்கள் செல்லுபடியாகும். வரி அரசுக்கு முறையாக வந்து சேரும். சில்லறை வணிகத்தில் 51 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப் பட்டுவிட்டது. இருந்தபோதிலும் அந்தந்த மாநிலங்கள் விரும்பினால் மட்டுமே வால்மார்ட்டை அனுமதிக்க முடியும். உதாரணத்திற்கு வால்மார்ட்-க்கு மேற்கு வங்க அரசு அனுமதி வழங்க மறுத்து விட்டதை சொல்லலாம்;. கடிவாளம் மாநில அரசு கையில் உள்ளது.
    இந்தியாவில் இத்தகைய நிறுவனங்கள் பெருநகரங்களில் (பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 53 நகரங்களில்) மட்டுமே தொடங்க வாய்ப்புள்ளது. தெருவுக்கு தெரு, சந்துக்கு சந்தெல்லாம் வால்மார்ட்டை தொடங்கிவிட முடியாது. மேலும் வியாபாரம் குறைந்து நஷ்டம் எனில் அவர்களே மூடிவிடுவார்கள்.

எதிர்ப்பவர்களின் வாதம்:

    வல்லவர்கள் மட்டுமே இங்கே தாக்குபிடிப்பார்கள். மற்றவர்கள் காணாமல் போவார்கள். முப்பது சதவீதம் பொருட்களை உள்ளுரில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் தான் வாங்க வேண்டும் என்ற இந்திய அரசின் கட்டுப்பாட்டை வால்மார்ட் நிறுவனம் மீறினால் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஒப்பந்தப்படி ஒப்பந்தக்காலம் முழுவதும் சரக்கு தர மறுத்தால்  விவசாயி கம்பெனிக்கு அபராதம் கட்ட வேண்டும். உள்ளுர் தரகர்களுக்குப் பதில் வால்மார்ட் தரகராக மாறிவிடும். வால்மார்ட் மீது கடந்த பதினைந்து ஆண்டுகளில் உலகளவில் ஆயிரக்கணக்கான வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. வால்மார்ட் வருகையை நம் நாட்டில் சிறு, குறு, பெரிய வியாபாரிகள் எதிர்க்கிறார்கள். தொழிற்சங்கம் கிடையாது. சம்பள உயர்வு கேட்டால் வேலை காலியாகிவிடும். சின்ன மீன்களை விழுங்கும் பெரிய திமிங்கலம் போல வால்மார்ட் உரிமையாளர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். சில்லறை வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை அழித்து விடும். 2 சதவீத வேறுபாட்டால் கட்டு;ப்பாடு கைமாறும் (51 சதவீதம் முதலீடு). நமது நாட்டின் வளம் நம் கையில்தான் இருக்க வேண்டும். அந்நியர்களிடம் விடக்கூடாது. சமன்பாடு இல்லாத சமுதாயம் உருவாகும். சீன, கொரிய பொருட்களை மிகவும் மலிவு விலையில் வாங்கி சந்தைப்படுத்தும். பெப்சி, கோலா கம்பெனிகள் உள்ளுர் குளிர்பானக் கம்பெனிகளை விரட்டியது போல, இந்திய தயாரிப்புகள் படிப்படியாக குறைந்து போகும். எல்லாவற்றையும் விட நமது சில்லறை வர்த்தகர்களின் லாபம் இந்தியாவிலேயே சுற்றும். ஆனால், வால்மார்ட்டின் வருவாய் அதன் தாய் நாட்டிற்கே போகும். இன்று அரசுவேலை, வங்கிக்கடன், மானியங்கள் எதுவுமின்றி சுயமாக தொழில் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
    பல நூற்றாண்டுகளாக நம் நாடு அந்நியருக்கு அடிமைப்பட்டு இருந்தது. மீண்டும் அடிமைப்பட்டால் இன்னொரு மகாத்மா வருவாரா? மாபெரும் நிறுவனங்கள் உடன்படிக்கைகளை மீறினால் மோதுவது எளிதல்ல. ஏற்கனவே அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் சகோதரன் நாம் நண்பன் மட்டுமே- என்கின்ற வாதங்களை முன்வைக்கின்றனர். 

    நடுநிலையாளர்கள் வாதம்:

அப்படிப்பார்த்தால், 1615ம் ஆண்டில் இங்கிலாந்து அரசர் ஜேம்ஸ்-1 அனுப்பி வைத்த சர் தாமஸ் ரோ பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு சலுகைகள் கோரி இந்தியாவில் பேரரசர் ஜஹாங்கீர் காலத்தில் கால் கடுக்க காத்திருந்து அனுமதி பெற்று நம் நாட்டில் வியாபாரம் செய்த ஆங்கிலேயர்கள் பின்னர் ஆட்சியாளர்களாக மாறினார்கள். 1857ல் மொகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி சக்கரவர்த்தி இரண்டாம் பகதூர்ஷா-வை கேப்டன் வில்லியம் ஹாட்ஸன் தலைமையிலான படை  கைது செய்து பர்மாவுக்கு நாடு கடத்தியது. 1862-ல் ரங்கூனில் அவர் நிராதரவாக இறந்தார். நாம் சுமார் 200 ஆண்டுகள் அடிமைப்பட்டோம்.

    இப்படிப்பார்த்தால், 25 ஆண்டுகளுக்கு முன்னால் அரசு கணினியை அலுவலகங்களில் அறிமுகப்படுத்த முயன்ற போது வேலை இழப்பு ஏற்படும் என பெரிய எதிர்ப்பு இருந்தது. பின்னாட்களில் கணினி தவிர்க்க முடியாததாகிவிட்டது. விறகு அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பாகி  தற்போது கேஸ் அடுப்பு மின்சார அடுப்பு  என்றாகிவிட்டது. மாட்டுவண்டி, குதிரை வண்டி, கை ரிக்ஷா காணாமல் போய் ஆட்டோ, கால் டாக்ஸி என்றாகிவிட்டது. வால்மார்ட் விரிக்கும் வலை அகலமற்றதே. நன்மை தீமை எல்லா விஷயங்களிலும் உண்டு. முன்கூட்டியே எந்த அடிப்படையில் ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது. தீர்வும் தெளிவும் காலத்தின் கைகளில். எனவே, காலம்தான் இதற்கு சரியான பதிலை சொல்லும்.

No comments:

Post a Comment